புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33கி.மீ தூரத்திலும் கீரனூரிலிருந்து 15கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி.
இவ்வூரில் சிவபெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் அருகருகே இரண்டு குடை வரை கோயில்கள் அமைந்துள்ளது. சிவபெருமான் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி.730-ல் நந்திவர்ம பல்லவன் இங்குள்ள மலையை குடைந்து வாகீஸ்வரர் என்றழைக்கப்படும் கோயிலை எழுப்பித்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.
விஷ்ணு கோவில் சிவன் கோயிலை விட காலத்தால் பிந்தியது. இங்கு நரசம்மமூர்த்தி, திருமால், ஆனந்த சயனமூர்த்தி மற்றும் ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. திருமால் குடைவரை கோயிலில் அர்த்த மண்டபத்தின் மேல்தளத்தில் தசாவாதார ஓவியங்கள் (பெருமானின் பத்து அவதாரம்) ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பழங்கால முதுமக்கள் தாழியும் புதைந்த நிலையில் காணப்படுகிறது.